கோவை மாவட்டத்தில் இதுவரை 4,93,441 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்குவதாலும், இந்த ஆட்சியின் பதவிக்காலம் முடிவதன் பொருட்டும் தமிழகமெங்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ளன.
கோவையில் உக்கடம் -ஆத்துப்பாலம் மேம்பாலம், கோவை திருச்சி பிரதான சாலையில் ஸ்டாக் எக்சேஞ்சில் இருந்து ரெயின்போ வரையிலான மேம்பாலம், கவுண்டம்பாளையம் பகுதியில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை 1 கி.மீ. நீளத்திலான உயர்மட்ட மேம்பாலம், மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குறிச்சிக் குளக்கரை பொலிவுபடுத்தும் பணி, பந்தய சாலையில் சிந்தட்டிக் நடைபாதை, உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கும் பணிகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி மானிய விலையில் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், கோவை மாநகரமெங்கும் நடக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள். ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகள், பசுமை வீடுகள், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டப்பணிகள், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டப்பணிகள், நொய்யல் ஆற்றினைப் புனரமைக்கும் பணி, பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தித்திட்டம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் என ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளை எல்லாம் விரைந்து முடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து அலுவலர்களை வலியுறுத்தி வருகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.
இதற்காக இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட முகாம் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்படப் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் மேற்படி வேலைகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்திய அமைச்சர் தொடர்ந்து பேசியதாவது:
''அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பட்டா மாறுதல், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணியினை வருவாய்த் துறையினர் உரிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வங்கிக் கடன் வழங்கும் செயல்திட்டம் ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் அரசு வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 15,605 சிறப்புக் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 16,57,231 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகத் தினந்தோறும் மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் இதுவரை 4,93,441 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தற்போது வரை 41,262 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 36,974 நபர்கள் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பல்வேறு நோய்த் தொடர்பிலிருந்த 530 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,758 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்''.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.