தமிழகம்

பருப்பு விலை உயர்வுக்கு உற்பத்தி குறித்த பதிவு இல்லாததே காரணம்: விவசாய சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

”விவசாய விளைபொருட்களின் விளைச்சல் குறித்து சரியான புள்ளிவிவரங்களை அரசு சேகரிக்காததும், பதிவுகளை மேற்கொள்ளாததும்தான் பருப்பு விலை உயர்வுக்கு காரணம்” என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு விளைபொருட்களுக்கும் உள்நாட்டு நுகர்வு அளவும், ஏற்றுமதி, இறக்குமதி அளவும் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. நாட்டில் விளையும் பல்வேறு பயிர்களின் சாகுபடி பரப்பளவு இலக்கை அங்கு அரசு நிர்ணயம் செய்கிறது.

குறிப்பிட்ட பயிரின் உற்பத்தி இலக்கை அடைந்தவுடன் அங்கு சாகுபடியை நிறுத்துமாறு அரசு கூறுகிறது. அறுவடைக்கு முன்பே விளையும் பொருளின் அளவு தெரியவருவதால், பற்றாக்குறை மற்றும் உபரி அளவை கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க முடிகிறது. இதனால், அங்கு பற்றாக்குறை மற்றும் விலை வீழ்ச்சி தடுக்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் அதிக விலை கிடைக்கும் பொருளை அதிக அளவிலான விவசாயிகள் சாகுபடி செய்வதும், அதனால் உற்பத்தி அதிகரித்து விவசாயிகளுக்கு விலை கிடைக்காமல் போவதும் தொடர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்பட்டு இடைத்தரகர்கள் மட்டும் லாபம் அடைந்து வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் பருப்பு விலை உயர்ந்துள்ளது. இதற்கு பதுக்கல், இணையசேவை மூலம் வர்த்தகம், மழை குறைவு என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆனால், உள்நாட்டில் விவசாய விளைப்பொருட்களின் உற்பத்தி குறித்து அரசு முறையான புள்ளிவிவரங்களைச் சேகரிக்காததும், உரிய பதிவுகளை வைத்திருக்காததும்தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

கிராம அளவில் நிர்வாக அலுவலர்கள் பயறு வகை சாகுபடி பரப்பளவைக் கணக்கிட்டு அரசுக்கு அளிப்பதில்லை. இதன் காரணமாகவே வெங்காயம், தக்காளி போன்றவை கிலோ ஒரு ரூபாய் அளவுக்கு வீழ்ச்சியடைவதும், 100 ரூபாய் அளவுக்கு உயர்வதும் நடக்கிறது.

தமிழக அரசு ரேஷன் கடைகளில் கிலோ ரூ.30 என்ற விலையில் மாதம் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரத்து 500 டன் பருப்பை மக்களுக்கு விநியோகித்து வருகிறது. இவை இந்தியாவில் விளைந்தவை அல்ல. ஆண்டுக்கு ரூ.1,500 கோடி செலவு செய்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.

ஆளுமையையும், நிர்வாகத் திறனையும் அரசுகள் இழந்து நிற்பதால்தான், நமது நாட்டின் தேவைக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டு நுகர்வோரும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, விவசாயப் பொருட்களின் விளைச்சல் மற்றும் உள்நாட்டு தேவை குறித்த முறையான புள்ளிவிவரங்களை அரசு சேகரித்து அதன் அடிப்படையில் விவசாயிகளை வழிநடத்தினால் எந்த பொருளுக்கும் பற்றாக்குறையோ, உபரியோ ஏற்படாது. பருப்பு விலை உயர்வு போன்ற பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT