திருச்சி – தஞ்சாவூர் சாலையில் பழைய பால்பண்ணை முதல் திருவெறும்பூர் வரை குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளதால், இருசக்கர வாகனப் போக்குவரத்து இந்த பகுதியில் அதிகளவில் உள்ளது.
இந்த சாலை தேசிய நெடுஞ் சாலையாக உள்ளது. ஆனால், சர்வீஸ் சாலை இல்லாததால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களும் நெடுஞ்சாலையிலேயே பயணித்து வருகின்றன. மேலும் எதிர் திசையிலும் வாகனங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலையின் ஓரங்களில் சேரும் மணலை முறை யாக அப்புறப்படுத்தாததால், தற்போது, சாலையின் ஓரத்தில் 5 அடி அளவுக்கு மண் குவியல் பரவிக் கிடக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் இந்த மணலில்சறுக்கி சாலையில் விழுந்து காயமடைவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இதுகுறித்து சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் எஸ். சக்திவேல் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: சென்னை–மதுரை தேசிய நெடுஞ் சாலையை பராமரிப்பதில் 50 சத வீதம் அளவுக்குக் கூட திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலையை ஒப்பந்த நிறுவனம் பராமரிப்பதில்லை. சாலை ஓரங்களில் ஆங்காங்கே மணல் குவியலாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஒரு பெரிய வாகனம் சென்றால் அதன் வேகத்தில் சாலையில் உள்ள மணல் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நிற்போருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சாலை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இந்த சாலை யில் குவிந்து கிடக்கும் மணல் குவியலை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ் சாலைத்துறை திட்ட இயக்குநர் உதயசங்கரிடம் கேட்டபோது, “சாலையை முழுவதுமாக தூய்மைப்படுத்த வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறையாக பணியை மேற்கொள்ள அவர்களுக்கு மீண்டும் அறிவுறுத்து கிறேன் என்றார்.