கோப்புப்படம் 
தமிழகம்

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 800 கனஅடி தண்ணீர் திறப்பு: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை விநாடிக்கு 800 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஓசூர் அடுத்த கெலவரப் பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 858 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 880 கனஅடியாக உயர்ந்தது.

அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 39.36 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 880 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் கொலுசுமடுவு, எண்ணே கோல்புதூர் தடுப்பணைகள் உட்பட 11 தடுப் பணைகளைக் கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது.

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 642 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 779 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 49.10 அடிக்கு தண்ணீர் உள்ளது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலையிலிருந்து விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டுள் ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங் களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன.

கிருஷ்ணகிரியில் கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை மழை பெய்தது. கிருஷ்ணகிரி நகரில் மாலை 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

SCROLL FOR NEXT