ஈரோட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் பொரி விலை மூட்டைக்கு ரூ.100 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டங்களின் போது, வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் நடக்கும் பூஜை படையலில், பழங்கள், சுண்டல் போன்றவற்றுடன் பொரியும் இடம்பெறுவது வழக்கம்.
இந்த காலகட்டத்தில் வழக்கத்தைக் காட்டிலும் பல மடங்கு பொரி விற்பனை அதிகரிக்கும் என்பதால், உற்பத்தியும் அதிகரிக்கும். ஆயுதபூஜை விற்பனைக்காக ஈரோடு மாவட்டத்தில் சூளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொரி உற்பத்தி செய்யும் ஆலைகளில் உற்பத்தி தீவிரமாகியுள்ளது.
இதுகுறித்து பொரி வியாபாரிகள் கூறியதாவது:
கர்நாடக மாநிலம் தாவனகரே, மாண்டியா, மைசூரு, கொள்ளேகால் போன்ற பகுதியில் இருந்து நெல்லினை (ரகம் 64) கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி பொரி தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கும் பொரியினை சேலம், தருமபுரி, நாமக்கல், வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆண்டு 100 பக்கா கொண்ட ஒரு மூட்டை ரூ.550 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.
விறகு உள்ளிட்ட எரிபொருள், மின்சார கட்டணம், தொழிலாளர்கள் ஊதியம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. ஆனால் பொரி விற்பனை விலை மட்டும், செலவுக்கு ஏற்றவாறு உயரவில்லை. கரோனா பொது முடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொழிற்சாலைகளில் இருந்து பொரி ஆர்டர்கள் குறைந்துள்ளன, என்றனர்.