தமிழகம்

பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்காக விசிக தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மனுஸ்மிருதியில் இருப்பதாகக் கூறி குறிப்பிட்ட மதம் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியில் இருப்பதாகக் கூறி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்துக்குரியது. பெண்களை இழிவுபடுத்தியதற்காக திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெண் உரிமை பற்றி பேசும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள்திருமாவளவனின் இந்தப் பேச்சை கண்டிக்காமல் மவுனம்சாதிப்பது ஏன்? திராவிடம் பற்றிபேசுபவர்களின் வீடுகளில் இருப்பவர்களே அக்கொள்கையை பின்பற்றுவதில்லை. ஆனால், மக்களிடம் மட்டும் கொள்கை பேசுகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறை என்பது காலம்காலமாக பின்பற்றப்படும் நம்பிக்கை சார்ந்தது. இதை ஏற்கெனவே நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அனைத்து மதத்தின் நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

SCROLL FOR NEXT