கரோனா தொற்றை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர் தன்மை குறித்துஆராய்ச்சி செய்வதற்காக ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையுடன் தேசிய சித்த மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சித்த மருத்துவமும் மக்களிடம் அதிக கவனத்தை பெற்றது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்புமையங்கள் ஏற்படுத்தப்பட்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம்,மூலிகை தேநீர், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகைஉணவுகள், நவதானியங்கள் போன்றவற்றை தந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை), கரோனா தொற்றை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர் தன்மை குறித்த ஆராய்ச்சிக்காக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுபற்றி தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஆர்.மீனாகுமாரியிடம் கேட்டபோது, ‘‘கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் கரோனா தொற்றை எப்படி குணப்படுத்துகிறது. எவ்வளவு நாட்களில் குணப்படுத்துகிறது. கபசுரக் குடிநீரால் உடலுக்குஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் அதிகமான கரோனாநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால்தான், ஆராய்ச்சிக்காக இந்த மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுத்து எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது. இவற்றுடன் சேர்த்து முதியோர், குழந்தைகள், மகளிர் மருத்துவம் மற்றும் தோல் நோய்கள், வாத நோய்கள் குறித்தும் ஆராய்ச்சி நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.