மலேசியாவுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்த முயன்ற பெண்ணை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்லும் பயணி ஒருவர் போதைப் பொருள் கடத்துவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளையும், அவர்களின் பொருட்களையும் போலீஸார் தீவிரமாக சோதனை செய்தனர்.
சுற்றுலா பயணியாக மலேசியா செல்ல இருந்த வடசென்னையை சேர்ந்த லட்சுமி தேவராஜ் (35), என்ற பெண்ணின் உடைமைகளை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர். அவரது கைப்பையில் 6 பால் பவுடர் டின்கள் இருந்தன. அதிலிருந்த பவுடரை சோதனை செய்தபோது அது ஹெராயின் என்பது தெரிந்தது. 6 டின்களில் தலா 500 கிராம் வீதம் மொத்தம் 3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், லட்சுமியை கைது செய்தனர். அவரை அண்ணாநகரில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுடன் லட்சுமிக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இவருடன் தொடர்புடைய கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.