மத்திய அரசின் இந்திய வேளாண் கழக உறுப்பினராக இருந்தவரும் கடலூர் மாவட்ட விவசாயச் சங்க முன்னோடியுமான கா.வி.கண்ணன் பிள்ளை திருவுருவப் படத்திறப்பு நிகழ்வு இன்று சிதம்பரத்தில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் கா.வி.கண்ணன் பிள்ளை. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக டெல்டா பகுதி விவசாயிகள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர். காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட டெல்டா விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்துச் சிறை சென்றவர் கண்ணன் பிள்ளை. காவிரிப் பிரச்சினையை அரசியல் கலப்பில்லாமல் இரண்டு மாநில விவசாயிகளும் தங்களுக்குள்ளேயே பேசித் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரிக் குடும்பத்தின் முக்கிய அங்கத்தினராக இருந்த இவர், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர்.
காவிரிப் பிரச்சினையின் தாக்கம் குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு நூல்களை எழுதி இருக்கும் கண்ணன் பிள்ளையை அண்மையில் மத்திய அரசு இந்திய வேளாண் கழக உறுப்பினராக நியமனம் செய்திருந்தது. 74 வயதைக் கடந்த கடந்த கண்ணன் பிள்ளை கரோனா தொற்றுக்கு ஆளாகி சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 26-ம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், கண்ணன் பிள்ளை திருவுருவப் பட திறப்பு நிகழ்வு இன்று மதியம் சிதம்பரத்தில் நடைபெற்றது. சிதம்பரம் சாரதாராம் ஹோட்டல் கூட்ட அரங்கில் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழக அரசு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி கண்ணன் பிள்ளை திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நா. முருகுமாறன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வீர.இளங்கீரன் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் கண்ணன் பிள்ளை குடும்பத்தினர் பங்கெடுத்துக் கொண்டனர்.
கடலூர் மாவட்டக் கரோனா கண்காணிப்பு அலுவலராகவும் இருக்கும் ககன்தீப் சிங் பேடி முன்னதாக இன்று காலையில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சையிலிருக்கும் மக்களைச் சந்தித்து நலம் விசாரித்து அவர்களிடம் நிறை குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் மருத்துவமனையின் டீன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அருகே பெராம்பட்டு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையையும் பார்வையிட்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.