கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதானவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்ப்பதற்காக இடைக்கால ஜாமீன் கோரி தாக்கலான மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவர் 2015-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். தற்போது இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதையடுத்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை சிறையில் உள்ள கிரிதர், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், சுரேஷ், பிரபு ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடியானது.
இந்நிலையி்ல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 2வது குற்றவாளியான அருணுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு அவரது சகோதரர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், அருண் 2015-ல் கைது செய்யப்பட்டு 1836 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். என் தந்தை லாரி ஓட்டுனர். பணி நிமித்தமாக அசாம் மாநிலம் சென்றார்.
அங்கு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அசாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். என் தந்தையை பார்ப்பதற்காக அருணுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி அப்துல்குத்தூஸ் விசாரித்து, மனுவில் மனுதாரர் தெரிவித்துள்ள தகவல்களை உறுதி செய்து தெரிவிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை அக். 28-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.