தமிழகம்

ஆளுநர் ஒப்புதல் தாமதம்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் 

செய்திப்பிரிவு

ஆளுநர் மாளிகையின் ஆலோசனைகளை மக்கள் மன்றத்தில் முன்வைப்பதும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஒன்றுபட்ட அழுத்தம் தந்து, ஆளுநரின் அத்துமீறலை தடுப்பதும் மாநில அரசின் அரசியலமைப்பு சார்ந்த கடமைப் பொறுப்பாகும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தமிழ்நாடு அரசு, இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களில் 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதாவை, செப்டம்பர் 15, 2020 சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மாநில சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்க வேண்டிய ஆளுநர், மக்கள் பிரதிநிதித்துவ நெறிமுறைகளை நிராகரித்து, அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.

ஆளுநரின் அத்துமீறலை கண்டித்தும், அரசின் 7.5 இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு, எழுதியுள்ள பதில் கடிதத்தில் “தான் (ஆளுநர்) முடிவெடுக்க மேலும் 3 அல்லது 4 வாரங்கள் கால அவகாசம் தேவை” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசின் சார்பில் சந்தித்த அமைச்சர்களிடமும் தெளிவுபடுத்தியுள்ளதாக ஆளுநர் கடிதத்தில் கூறியுள்ளார். ஆளுநர் கூறிய தகவலை மாநில அமைச்சர்கள் மூடி மறைத்து ஏன்? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

நடப்பு கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து. சமூக நீதியை மத்திய அரசு நிராகரித்திருப்பதைப் போல், ஆளுநர் முடிவெடுப்பதை தாமதப்படுத்தி, அரசுப்பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெறும் உரிமையை நிராகரிப்பது படுமோசமான நரித் தந்திரமாகும்.

மேலும் “முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்படும்” என்று தெரிவித்திருப்பது மாநில அரசுக்கு நிபந்தனை போட்டு, நிர்பந்திக்கும் செயலாகும். இது கூட்டாட்சி கோட்பாடுகள் மீது ஆளுநர் மூலம் நடத்தும் மத்திய அரசு நடத்தியுள்ள நேரடித் தாக்குதலாகும்.

ஆளுநர் மாளிகையின் சதியாலோசனைகளை மக்கள் மன்றத்தில் முன்வைப்பதும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஒன்றுபட்ட அழுத்தம் தந்து, ஆளுநரின் அத்துமீறலை தடுப்பதும் மாநில அரசின் அரசியலமைப்பு சார்ந்த கடமைப் பொறுப்பாகும்.

ஆளுநரின் அத்துமீறலை தடுக்க உடனடியாக மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT