விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியான எரிச்சநத்தம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் சிவகாசியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்குச் சொந்தமான ராஜேஸ்வரி என்ற பெரியல் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.
சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாத்துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பட்டாசுகளுக்கு திரி வைக்கும் போது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் உள்ள 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பேராயூர் அருகே உள்ள பாறைபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி வேல்தாய் (45), சிலார்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி லட்சுமி (40), காடனேரியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மனைவி அய்யம்மாள் (65), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி சுருளியம்மாள் (50) மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவரும் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (39), காடனேரியைச் சேர்ந்த பெருமாள் மனைவி லட்சுமி (45), அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மனைவி மகாலட்சுமி (45) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.