ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டார். இதன் மீது ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 1,122 வாக்குச்சாவடிகள் அடங்கிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று (அக். 23) வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் திவ்யதர்ஷினி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இந்தப் பட்டியலை வெளியிட்டார்.
1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாகப் பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைத்தல், குறைவான வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை ஒன்றிணைத்தல் உள்ளிட்ட 5 வகையான நெறிமுறைகளின் அடிப்படையில் வாக்குச்சாவடிகளில் 35 புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் மாறுதலுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சேபனைகள், திருத்தங்கள் வேண்டும் என்றால் அதுகுறித்து எழுத்துப்பூர்வமான கடிதங்களை 7 நாட்களுக்குள் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பேபி இந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இளவரசி, தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.