புதுச்சேரியில் இன்று புதிதாக 158 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 23) கூறும்போது, "புதுச்சேரியில் 3,784 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-95, காரைக்கால்-18, ஏனாம்-9, மாஹே-36 என மொத்தம் 158 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 584 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.72 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 33 ஆயிரத்து 986 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,072 பேர், காரைக்காலில் 255 பேர், ஏனாமில் 31 பேர், மாஹேவில் 69 பேர் என 2,427 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், புதுச்சேரியில் 1,358 பேர், காரைக்காலில் 59 பேர், ஏனாமில் 58 பேர், மாஹேவில் 73 பேர் என 1,548 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 3,975 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 162 பேர், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 9 பேர், மாஹேவில் 13 பேர் என 216 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்துவீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 427 (86.59 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 40 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 463 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
புதுச்சேரியின் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 18 சதவீதம் பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்துள்ளோம். அடுத்த 4 நாட்களில் 20 சதவீதத்தை நாம் எட்டுவோம். இது புதுச்சேரியில் அதிகம்.
கரோனா தொற்று குறைந்தாலும் கூட முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். கூட்டங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கடைப்பிடித்தால் கண்டிப்பாக கரோனாவை கட்டுப்படுத்த முடியும்" என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.