சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 23) மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதம்:
"தமிழகத்தில் மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் மாநிலத்திற்குள்ளான ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஏற்கெனவே மீண்டும் தொடங்கிவிட்டது. அதேபோன்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. பொதுமக்களுக்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புறநகர் ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என, கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.
மின்சார ரயில்கள்/புறநகர் ரயில்களை மீண்டும் இயக்குவது, பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்கவும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார ரயில்கள் / புறநகர் ரயில்களை கோவிட் - 19 வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் இயக்குவதற்கு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும்".
இவ்வாறு அக்கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.