தமிழகம்

‘ஒரு மணி நேர மழை தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை, வடிகால்கள் வாரப்படவில்லை’: கமல் விமர்சனம் 

செய்திப்பிரிவு

நேற்று சென்னையில் பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ள நீர்போல் மழைநீர் சூழ்ந்தது. வாகன ஓட்டிகள் தடுமாறினர். இதை விமர்சித்து மக்கள் நீதிமய்ய தலைவர் கமல் கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை, ஒரு மணி நேர மழை தள்ளாடுது தமிழகத்தின் தலை(நகர்) என விமர்சித்துள்ளார்.

வெப்பச் சலனம், மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. காலை முதலே மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் சுமார் 3 மணி அளவில் தொடங்கிய மழை சென்னை முழுவதும் பரவலாகப் பெய்தது.

இதனால் சென்னை முழுவதும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தாழ்வான இடங்களில் சாலையில் வெள்ளம்போல் நீர் தேங்கியது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மழை நீர் தேங்கியது.
ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மீனம்பாக்கம் பகுதியில் 4 செ.மீ. மழையும், அண்ணா நகர், கே.கே. நகர் பகுதிகளில் 6 செ.மீ. வரை மழை பதிவானது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன் முன்னேற்பாடுகள் செய்வது குறித்து மாநகராட்சி கூட்டம் போட்டு சென்னையில் மழை நீர் தேங்கி நிற்கும் இடங்கள் 300-க்கும் மேற்பட்டவை சரி செய்யப்பட்டு 10-க்கும் குறைவான இடங்களே தற்போது நீர் தேங்கும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது.

ஆனால் சில மணி நேர மழைக்கே சாலையில் நீர் வெள்ளம் போல் தேங்கினால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையின் நிலை என்ன ஆகும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மழை பெய்து தண்ணீர் தேங்கியது குறித்தும், குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

“ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.

குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை.கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள்”.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT