தமிழகம்

பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் வயலில் குழி தோண்டியபோது கண்டறியப்பட்ட 5 உலோக சிலைகள், பழங்கால பொருட்கள்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே விவசாயி வயலில் குழி தோண்டியபோது அரை அடி உயரமுள்ள 5 உலோகச் சிலைகள் மற்றும் பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.கே.ஆர்.லெனின்(63) என்பவர் கொய்யாக் கன்று நடுவதற்காக நேற்று தனது வயலில் குழி தோண்டினார். அப்போது, ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டிய நிலையில் அரை அடி உயரமுள்ள 3 விஷ்ணு சிலைகள், ஒரு அம்மன் சிலை, ஒரு ஆழ்வார் சிலை ஆகிய உலோகச் சிலைகள் கிடைத்தன. மேலும் 4 கலயங்கள், 5 கிண்ணங்கள், 1 மண்பானை ஓடு, தட்டுகள் உள்ளிட்ட 27 பழமையான பொருட்கள் கிடைத்தன.

இதுகுறித்து, விவசாயி லெனின் அளித்த தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் அங்கு சென்று கண்டறியப்பட்ட சுவாமி சிலைகள், பழமையான பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் சிலைகள் உள்ளிட்ட 27 பொருட்களையும் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT