பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்து 
தமிழகம்

ஊத்தங்கரை அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து; சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் பட்டாசு கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்து சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி குன்னத்தூர் ரோட்டில் கமல்பாஷா பட்டாசு கடை இயக்கி வந்தது. இந்த கடை உரிமையாளர் ரிஷ்வான் பாஷா (28), கடந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டாசு தொழில் செய்து வருவதாக தெரிகிறது. இந்த கடையில் தற்போது வருகிற தீபாவளிக்காக புது புது வகையான பட்டாசுகள் ரூ.15 லட்சம் மதிப்பில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று (அக். 23) காலை 8 மணியளவில் கடையில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த மக்கள் பலத்த வெடி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் சாலயில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. சுமார் அரை மணி நேரமாக பட்டாசுகள் வெடித்து சிதறின.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் தீயை அனைத்தனர். இச்சம்பவத்தால் சாமல்பட்டியில் பட்டாசு கடை வெடிந்த இடத்தில் மக்கள் கூடினர்.

வெடி விபத்துக்குக் காரணம் மின் கசிவா அல்லது வெப்பம் தாங்காமல் பட்டாசுகள் வெடித்ததா என சாமல்பட்டி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் காலை நேரம் என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

மேலும் இந்த பட்டாசு கடை உரிமையாளர் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு இதே பகுதியில் இதே போல பட்டாசு விபத்து விபத்தில் உரிமையாளரின் உறவினர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இதே போல அவர் குடோன் பகுதி உள்ள பெரிய ஜோகிப்பட்டி பகுதியில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பட்டாசு விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் இதுபோன்ற தொடர் விபத்து இப்பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT