தமிழகம்

கரோனா இன்னும் ஓயவில்லை; பிரதமர் சொல்வதைக் கடைப்பிடிப்போம்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் கரோனா விழிப்புணர்வுப் பேச்சை அனைவரும் பின்பற்றி கரோனாவை வெல்வோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை, அவற்றில் இருந்து இந்நாடும், இந்நாட்டு மக்களும் அதில் இருந்து எப்படி, தங்களைப் பாதுகாத்துக்கொள்வது, எச்சரிக்கையாக இருப்பது என்று மருத்துவக் குழுவினரின் ஆலோசனைப்படி நமது பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கையின் மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன்னர் அளித்த உரையில், தற்பொழுது ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கரோனா வைரஸ் இன்னும் நீடிக்கிறது. அதோடு வடகிழக்குப் பருமழை மற்றும் தீபாவளி பண்டிகை காலம் போன்றவற்றால் தொற்றுப் பரவ அதிகம் வாய்ப்பிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். கரோனா தொற்று 2-வது அலை தொடங்கியுள்ள நிலையில், கரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதில் எந்தவிதமான அரசியலும் இல்லை. கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. இவற்றை அனைவரும் பின்பற்றி விழிப்புணர்வுடன், கரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையில் நம்மை நாம் முழுமையாக ஒவ்வொருவரும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா முழுமையாக ஒழியும் வரை நாம் கரோனா கோட்பாடுகளையும், மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படியும் நடப்போம். நோயின்றி வாழ்வோம்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT