வெங்காயம் விலையேற்றத்தையடுத்து புதுச்சேரியில் மொத்த விற்பனை கடை மற்றும் குடோன்களில் அமைச்சர் கந்தசாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுவையில் வெங்காயம் பதுக்கலா? - கடைகளில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு

செய்திப்பிரிவு

புதுவைக்கு நாள் ஒன்றுக்கு 140 டன் வெங்காயம் தேவைப்படுகிறது. தற்போது 40 டன் மட்டுமே புது வைக்கு வெங்காயம் வருகிறது. ஆந்திராவில் கனமழை காரணமாக அங்கிருந்து வெங்காயம் வர வில்லை. பெங்களூருவில் இருந்துவரும் வெங்காயம் ஒரு மூட்டைக்கு10 கிலோ அழுகி வருகிறது. நாசிக்கில் இருந்து வெங்காயம் கூடுதல்விலைக்கு வாங்கி புதுவை வியாபாரிகளால் விற்கப்படுகிறது. ரூ.60க்கு விற்ற பெல்லாரி வெங்காயம் தற்போது ரூ.90 முதல் 100 வரை விற்கப்படுகிறது. ரூ.40க்கு விற்ற மீடியம் வெங்காயம் ரூ.70 முதல் 80 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது.

வெங்காய விலை உயர்வால் புதுவை மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெங்காய விலை உயர்வு குறித்தும், பதுக்கப்படுகிறதா என ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள மார்க்கெட் கடைகளில் அமைச்சர் கந்தசாமி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அவருடன் குடிமைப்பொருள் வழங்கல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர். ஆய்வின்போது வெங்காய விலை உயர்வுக்கு காரணம் குறித்து வியாபாரிகளிடம் அமைச்சர் கந்தசாமி கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுவையில் வெங்காயம் பதுக்கிவைக்கப்பட்டு, அதிக விலைக்குவிற்கப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் துறைக்குபுகார்கள் வந்தன. இதனடிப்படையில் மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினோம். கரோனாவால் மக்கள் பணமின்றி கஷ்டப்படுகின்றனர். இந்நேரத்தில் வெங்காயத்தை பதுக்கி வைப்பதோ, அதிக விலைக்கு விற்பதோ கூடாது. பதுக்கல் குறித்து புகார் வந்தால் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட் டுள்ளது. கடைகளில் வெங்காய விலை பட்டியல் வைக்கவும், இதனை கண்காணிக்கவும் அதிகா ரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தட்டுப்பாடு இல்லாமல் வெங்காயம் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வியாபாரிகளை அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

அப்போது அரசின் பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் வெங்காயம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “புதுச்சேரி அரசால் வெங்காயம் வாங்கித்தர முடியாது. ஆளுநருக்கு கோப்பு அனுப்பினால், விலை குறைந்தவுடன்தான் ஒப்புதல் வரும். அனைத்தையும் பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணமாகவே தரச் சொல்வார். பணத்தையா சாப்பிட முடியும்’’ என்று கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT