சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,550 ஏக்கர் நிலங்களை அறநிலையத் துறை ஆலோசனையின்றி அவசரகதியில் வருவாய்த் துறையினர் அளவீடு செய்துள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிப்பதுடன், ஜிபிஆர்எஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் மற்றும்வீடியோ பதிவுடன் அளவிட வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தை சேர்ந்த ஆளவந்தார் நாயக்கருக்கு பட்டிபுலம், நெம்மேலி, கிருஷ்ணங்காரணை, கோவளம், சூளேரிக்காடு, சாலுவான் குப்பம் பகுதிகளில் சொந்தமாக இருந்த 1,550 ஏக்கர் நிலத்தை, திருவிடந்தை நித்தியக் கல்யாணப் பெருமாள், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் மற்றும் திருப்பதிவெங்கடேசப் பெருமாள் கோயில்களின் பெயரில் கைங்கர்யம் செய்வதற்காக கடந்த 1914- ம் ஆண்டு உயில் எழுதிவைத்தார்.
ஆளவந்தாரின் உயில்படி அந்த நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மேற்கண்ட கோயில்களில் பிரம்மோற்சவம், அன்னதானம் போன்றவை கட்டளையாக செய்யப்படுகின்றன. மேற்கண்ட நிலங்களில் 40 ஏக்கர் நிலம்கடல் நீரை குடிநீராக்கும் ஆலைஅமைக்க குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. குத்தகை நிலங்கள்போக மீதமுள்ள நிலங்கள் அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து 2 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, செங்கல்பட்டு ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 29-ம் தேதி உத்தரவிட்டது. இதனால், அதற்கான பணிகளை அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டன.இந்நிலையில், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை, அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக வருவாய்த் துறைமேற்கொண்டதாகவும், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலம் தொடர்பான பட்டா ஆவணங்களில் உள்ள பல்வேறு முறைகேடுகள் வெளிப்பட்டுவிடும் என்பதால், அவசரகதியில் வருவாய்த் துறை அளவீடு செய்ததாக உள்ளூர் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறியதாவது: 8 கிராமங்களில் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள 1,550 ஏக்கர் நிலங்களை வருவாய்த் துறையினர் குறுகிய காலத்தில் எப்போது, எப்படி அளவீடு செய்தனர் என்பது தெரியவில்லை. எனவே மேற்கண்ட நிலங்களை அறநிலையத் துறை முன்னிலையில் ஜிபிஆர்எஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வீடியோ பதிவுடன் அளவீடு செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் கூறியதாவது: அறக்கட்டளை நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தைதான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.