சென்னை பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகள் மகாலட்சுமி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஒரு நாள் கூலியை இழக்க நேரிட் டால் கூட குடும்ப பொருளாதார சுமையை தாங்குவது கடினம் என்ப தால், மகள் வெற்றி பெற்றதை கேட்ட பிறகும், அதைக் கொண்டாட ரிப்பன் மாளிகைக்கு அவரது தந்தை முருகன் வரவில்லை.
சென்னை புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி எம்.மகாலட்சுமி 493 மதிப்பெண்கள் பெற்று சென்னை பள்ளி மாணவர்களுள் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர் தமிழ் 97, ஆங்கிலம் 98, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது பற்றி மாணவி மகாலட்சுமி கூறுகையில், “நான் இரண்டாமிடம் பிடித்ததில் என்னைச் சுற்றியுள்ள எல்லோருக்கும் மகிழ்ச்சி. எனக்கு கணிதம் மிகவும் பிடிக்கும். எனவே, பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிக்க விரும்புகிறேன்” என்றார்.
அவரது தாய் தேவி கூறுகையில், “நான் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தேன். வீட்டு வேலை செய்கிறேன். எனது கணவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். எனவே, எங்களின் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க ஆசைப்பட்டோம். முதல் மகள் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாமிடம் பிடித்தாள். இவளும் ரேங்க் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது கணவருக்கு ஒரு நாளுக்கு ரூ.300 அல்லது ரூ.400 கூலி கிடைக்கும். இன்று வேலைக்கு போகாவிட்டால் அந்த கூலி கிடைக்காது” என்றார்.