தேவை அதிகரித்துவருவதால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்தாலும், தேவையை முழுமையாக பூர்த்திசெய்ய முடியாதநிலையில், விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது, என திண்டுக்கல் வெங்காய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் வெங்காய மொத்த விற்பனை மற்றும் ஏற்றுமதி மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. கடந்த ஒரு மாதமாக பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் வரத்து வெகுவாக குறைந்ததால் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது.
தற்போது உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாட்டு வெங்காயங்கள் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வரத்தொடங்கியுள்ளன. அக்டோபர் தொடக்கத்தில் கிலோ ரூ.45 க்கு விற்ற சின்னவெங்காயம் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.90- க்கும், பெரியவெங்காயம் ரூ. 40-க்கு வி்ற்ற பெரியவெங்காயம் ஒரு கிலோ ரூ.85 க்கும் விற்பனையாகிவருகிறது.
இந்நிலையில் வெங்காய விலை அதிரடியாக விலை உயர்ந்துவருவதை கணித்த மத்திய அரசு எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து இன்று திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்கு 100 டன் வெங்காயம் விற்பனைக்கு வந்தது.
திண்டுக்கல் மார்க்கெட்டில் தற்போது எகிப்து வெங்காயம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் வெங்காய ஏற்றுமதியாளர் கமிஷன் மண்டி வர்த்தகர் சங்கம் தலைவர் ஏ.வி.சவுந்திரராஜன் இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறியதாவது:
வடமாநிலங்களில் இருந்து வெங்காயவரத்து முற்றிலுமாக இல்லை. மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெய்த கனமழை அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காய பயிர்களை முற்றிலும் சேதமடையச் செய்துள்ளது. இதனால் அடுத்த பருவம் வரைக்கும் கூடுதலான வெங்காயத்தை எதிர்பார்க்க முடியாது.
ஐப்பசி மாதத்தில் விசேஷங்கள் அதிகம் உள்ளதால் வெங்காய தேவையை பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. எனவே தற்போதுள்ள இருப்புள்ள வெங்காயங்கள் போதுமானதாக இருக்காது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையிலும் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் வெங்காய விலை தொடர்ந்து விலை உயரவே வாய்ப்புள்ளது. இந்த நிலை மேலும் இரண்டு மாதங்கள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.