தூத்துக்குடியில் வெங்காய விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் வெங்காய மாலை அணிந்து, ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

வெங்காய விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம் 

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் இன்று வெங்காய மாலை அணிந்து, ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் வெங்காய வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி அண்ணா நகர் 7-வது தெரு சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பூமயில் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் வெங்காய மாலை அணிந்தபடி, ஒப்பாரி வைத்து வெங்காய விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். வெங்காய விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.

வெங்காயம் பதுக்கலை தடுக்க வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநகர தலைவர் காளியம்மாள், மாநகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் பா.சரஸ்வதி, ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT