குற்றாலம் அருகே கேரள வியாபாரியை மிரட்டி ரூ.45 லட்சம் கொள்ளையடித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்கபூர் (35). இவர், பழைய கார் வியாபாரம் செய்து வருகிறார்.
கேரள மாநிலம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் இடைத்தரகர் நசீர் (48). இவருக்கும், தென்காசி அருகே உள்ள நன்னகரத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் (42) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் இருந்து வந்த அப்துல் கபூரிடம், குற்றாலத்தில் ஒரு வீடு விற்பனைக்கு இருப்பதாகவும், அதை வாங்கினால் சீஸன் காலத்தில் வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் ஈட்டலாம் என்றும் நாகூர் முரானும், நசீரும் கூறியுள்ளனர்.
ஒரு வீட்டைக் காண்பித்து, அதன் விலை ரூ.1.50 கோடி என்று கூறி, ரூ.50 லட்சம் கொடுத்துவிட்டு சில நாட்கள் கழித்து கிரையம் செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அப்துல்கபூர் ரூ.45 லட்சம் பணத்துடன் குற்றாலத்துக்கு வந்துள்ளார். அவரை, இலஞ்சி- குற்றாலம் சாலையில் நிற்குமாறு கூறிவிட்டு, 2 கார்களில் நாகூர்மீரான், நசீர், இலஞ்சியைச் சேர்நத மணிகண்டன் (29), சதீஷ்குமார் (23), தூத்துக்குடி மாவட்டம், கூலைத்தேவன்பட்டியைச் சேர்ந்த அனில்குமார் (50) ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
இவர்கள் 5 பேரும் சேர்ந்து அப்துல்கபூரை மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.45 லட்சத்தை கொள்ளையடித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து குற்றாலம் காவல் நிலையத்தில் அப்துல்கபூர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து, தப்பிச் சென்ற 5 பேரையும் பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.45 லட்சம் பணமும் மீட்கப்பட்டது.