விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 எம்எல்ஏ.க்கள் உள்ளிட்ட 354 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு நேற்று மாலை திமுக சார்பில் கட்சி கொடியேற்ற போலீஸார் அனுமதி வழங்கியிருந்தனர். ஆனால், அதே நேரத்தில் அதிமுக சார்பிலும் கட்சி கொடியேற்ற அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இதற்கிடையே மாலை 5 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன் தலைமையில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் கட்சி கொடியேற்றினார்.
அப்போது சூரங்குடி சாலையில் இருந்த எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் ஊர்வலமாக வந்த அதிமுகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஏற்பட்டப் பிரச்சினையில், போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இதனைக் கண்டித்தும், எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் பேருந்து நிலையம் முன் மறியல் ஈடுபட்டனர்.
அவர்களுடன் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் டி.எஸ்.பி. கோபி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். பின்னர் பேருந்து நிலையம் முன்புள்ள அதிமுக கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றினர்.
இந்நிலையில், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஜி.வி.மார்க்கண்டேயன் உள்ளிட்ட 250 பேர் மீதும், சின்னப்பன் எம்.எல்.ஏ., ஒன்றிய அதிமுக செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட 100 பேர் மீதும் என மொத்தம் 354 பேர் மீது 143, 269, 270, 283 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.