தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு கூடுதலாக 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட உள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கயத்தாறு அருகே பன்னீர்குளத்தில் தமிழக கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் இந்த ஆண்டு 3 கால்நடை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு 40 கால்நடை கிளை நிலையங்களும், 25 கால்நடை நிலையங்களை மருந்தகங்களாகவும், 5 கால்நடை மருத்துவமனைகள் அமைக்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக கயத்தாறு ஒன்றியம் பன்னீர்குளத்தில் கால்நடை கிளை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கால்நடை கிளை நிலையமும் தலா ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான பொருட்களும், ஊட்டச்சத்தும் வழங்கப்படும். அதேபோல் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு இங்கேயே சிகிச்சை அளிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கறவைப் பசுக்களுக்கு தேவையான 4 வகை சினை ஊசிகள் இங்கேயே போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள 1962 என்ற எண்ணில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 2,154 பேர் அழைத்துள்ளனர்.
இதில் 1,154 பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமார் 900 கால்நடைகளையும் காப்பாற்றி இருக்கிறோம்.
தற்போது தொகுதிக்கு ஓர் அம்மா ஆம்புலன்ஸ் வழங்க தமிழக முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளோம். விரைவில், கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக அம்மா ஆம்புலன்ஸ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு 3 கால்நடை கிளை நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு கால்நடை மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கான அறிவிப்வை விரைவில் தமிழக முதல்வர் வெளியிடுவார்.
அரசு கேபிள் டிவி பொறுத்தவரை இதுவரை 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது" என்றார்.