மதுரை நகரில் நாளுக்கு, நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், குறுகிய ரோடுகளாலும் போக்குவரத்து சிக்கல் தவிர்க்க முடியாமல் உள்ளது.
மாநகர் முழுவதும் கோரிப்பாளையம் உட்பட சுமார் 33 இடங்களில் போக்குவரத்து சிக்னல் செயல்பட்டாலும், ஒவ்வொரு சிக்னலிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் கடக்கின்றன. வாகன பெருக்கத்தால் சில இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதனிடையே சிக்னல்களை பராமரிக்கும் நன்கொடையாளர்கள் (ஸ்பான்சர்ஸ்) முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான சிக்னல்கள் பழுதாகி, விளக்குகள் எரியாததால் வீதிமீறல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நகரிலுள்ள அனைத்து சிக்னல்களும் சீரமைத்து, டிஜிட்டல் முறையில் மாற்ற போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
ஸ்பான்சர்ஸ் மூலம் ஒவ்வொரு சிக்னலிலும் பழுதடைந்த விளக்கு, சிசிடிவி கேமராக்களை பொருத்தி, பெயிண்ட் அடித்து புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிக்னலும் இரவில் ஜொலிக்கும் வகையிலும், தானாக இயங்கும்படியும் மாற்றியமைக்கப்படுகிறது என, போக்குவரத்து காவல்துறை தெரிவிக்கிறது.
இது குறித்து போக்குவரத்து துணை ஆணையர் சுகுமாறன் கூறியதாது:
மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி பணியால் முருகன் கோயில், அய்யர் பங்களா சிவகங்கைரோடு, எஸ்பி பங்களா ஆகிய 4 சிக்னல் தவிர, 28 சிக்னல்கள் முறையாக செயல்படுகின்றன.
ஆணையர் பிரேமானந்த் சின்காவின் ஆலோசனையின்படி, அனைத்து சிக்னல்களும் டிஜிட்டல் மயமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இன்னும் 3 மாதங்களில் ஒவ்வொரு சிக்னலும் பெரும்பாலும் காவல்துறையினர் இன்றி தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்படும்.
சிக்னலை கடக்கும் வாகனங்களைப் பொறுத்து நேர அளவு நிர்ணயிக்கப்படும். இது தவிர, அதிகமாக வாகனங்கள் கடக்கும் 12 சிக்னல்களில் போக்குவரத்து விதியை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வாகனப் பதிவெண்கள், வாகன ஓட்டிகளின் முகத்தை துல்லிமயாகப் பதிவிட்டு காவல்துறை அதிகாரிகள், காவலர்களின் செல்போனுக்கு குறுந்தகவலாக செல்லும் வகையிலான நவீன கேமராக்கள் பொருத்தும் திட்டம் ஓரிரு வாரத்தில் நிறைவேறும் .
இதன்மூலம் தவறு செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் விதிமீற முடியாது. மதுரை நகரைப் பொறுத்தவரை வாகனங்கள் அதிகரிப்பால் பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி பணி முடிந்தபின், மாநகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசித்து நகரில் நான்கு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் பார்க்சிங் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்துவதால் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை.
வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நிறுவனத்தினர் வழிவிடவேண்டும். மதுரையில் வெளியூர் நபர்களின் வாகனங்களுக்கென தனி பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தினால் நெருக்கடி குறையும், என்றார்.
சிக்னலை கடக்க நேர அளவு தேவை
மதுரை சுகுணா ஸ்டோர் உள்ளிட்ட ஒருசில இடங்களில் ஏற்படுத்திய புதிய சிக்னல்களில் குறியீடு காண்பித்தாலும், நிமிட அளவு சிக்னல் விளக்கு திரையில் வராததால் வாகன ஓட்டி களுக்கு சிரமம் இருப்பதாக கூறுகின்றனர். நேர அளவு காண்பித்தால் அதற்கு தகுந்து சிக்னலை கடக்க தயாராகலாம். இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.