புதுச்சேரியில் ‘சண்டே மார்க்கெட்’ இனி காந்தி வீதியில் இயங்காது. தாவரவியல் பூங்காவில் இருந்து உப்பளம் வாட்டர் டேங்க் வரை ரயில்வே நிலையம் சாலையில் இனி இயங்கும். ஆயுத பூஜைக்கு பிறகு இந்த புதிய இடத்தில் மாற்றப்படும்.
புதுச்சேரியில் ‘சண்டே மார்க்கெட்’ பெயர் போனது. காந்தி வீதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வரும் இந்த பல்பொருள் விற்பனைச் சந்தை கரோனா தொற்றால் கடந்த 6 மாதங்களாக இயங்காமல் இருந்தது. கடந்த இரு வாரங்களாக மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதிக மக்கள் நெருக்கம் இருந்ததால் அதை கண்காணிக்க ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.
இந்நிலையில் ‘சண்டே மார்க்கெட்’ ஏஎப்டி திடல் பகுதிக்கு மாற்றப்படுவதாக ஆட்சியர் அருண் நேற்று மதியம் உத்தரவிட்டார். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி அந்த உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுபற்றி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "சண்டே மார்க்கெட் காந்தி வீதியில் இயங்கக்கூடாது என தெள்ளத் தெளிவாக ஏற்கெனவே கூறியுள்ளேன். தடையை மீறி இரண்டு வாரமாக கடை வைத்து வருகிறார்கள். இதனால் கரோனா தொற்று அதிகமாக வாய்ப்புண்டு. காந்தி வீதியில் கடை வியாபாரிகள் வாடகை தந்து கடை நடத்துகிறார்கள். சண்டே மார்க்கெட்டால் அவர்கள் கடைக்கு பொருள் வாங்க செல்ல முடியவில்லை என்று புகார் அளித்துள்ளனர். அதனால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
‘சண்டே மார்க்கெட்’கிற்காக தாவரவியல் பூங்காவில் இருந்து உப்பளம் வாட்டர் டேங்க் வரை ரயில்வே நிலைய சாலையில் இடம் ஒதுக்கித் தர முடிவு எடுத்துள்ளோம். அதற்கான. கோப்பு தயாரித்துள்ளோம். ஆயுத பூஜைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை மீறினால் கைது செய்து சிறையில் வைக்க முடிவு எடுத்துள்ளோம். ஏஎப்டி திடலுக்கு மாற்றும் உத்தரவும் ரத்தாகும்" என்று குறிப்பிட்டார்.