மாஞ்சா நூல் மூலம் காற்றாடியை பறக்கவிடுவதற்கு எதிராக போலீஸார் நடத்தி வரும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பறக்கவிடப்படும் காற்றாடி களால் அடிக்கடி அசம்பாவித சம்பவங்கள் நிகழ்கின்றன. சில தினங்களுக்கு முன்பு பெற்றோருடன் பைக்கில் சென்ற 5 வயது சிறுவன் மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு உயிரிழந்தான். இந்நிலையில் மாஞ்சா நூல் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள் குறித்து காற்றாடிகள் அதிகம் பறக்கவிடப்படும் பகுதிகளில் போலீஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நாடகம் மற்றும் பாடல்கள் மூலம் பொதுமக்களிடம் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கானா பாலாவின் பாடல்..
வியாசர்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட பாடகர் கானா பாலா கலந்துகொண்டு விழிப்புணர்வு பாடல்களைப் பாடினார். மேலும் மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார். மாஞ்சா நூலின் தீமை குறித்து கானா பாலா பாடியுள்ள பாடல்களை போலீஸார் பல்வேறு இடங்களில் ஒலிபரப்பி வருகின்றனர்.
இது குறித்து புளியந்தோப்பு துணை ஆணையர் ஆர்.சுதாகர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கானா பாலாவின் விழிப்புணர்வுப் பாடல் மூலம் காற்றாடி விடும் இளைஞர்களிடம் மனமாற்றம் ஏற்படுவதை காணமுடிகிறது. பொதுமக்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாடலைக் கேட்டு பலர் காற்றாடி விடுவதை நிறுத்திவிட்டதாக கூறுகின்றனர். விடுமுறை நாட்களில் முக்கிய இடங்களில் நாடகங்கள், கலை நிகழ்ச்சி வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும் செய்து வருகிறோம். கடந்த வாரம் 7 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாரம் 9 இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.