தமிழகம்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோரும் மனுவை பரிசீலிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தும் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக சமத்துவப் படை நிறுவனத் தலைவர் பி.சிவகாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:

திருச்செங்கோட்டைச் சேர்ந் தவர் கோகுல்ராஜ்(21). இவர் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர். பொறியாளரான இவர் உயர் ஜாதி பெண்ணை காதலித்ததற்காக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை திருச்செங் கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். அவர் சந்தே கத்துக்கு இடமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். எஸ்பியின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதாக அவரது தோழி டிஎஸ்பி மகேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார்.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற் கொலை, கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகியவற்றை சிபிசிஐடி போலீஸார் சரியாக விசாரிக்க வில்லை. எனவே, இவ்விரு வழக்கு களையும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வழக்கறிஞர் ரஜினி வாதிட்டார். விசாரணைக்குப்பின், சிபிஐ விசாரணை கோரி மனுதாரர் அளித்த மனு மீதான தகுதி குறித்து ஆராய விரும்பவில்லை. அவரது மனுவை டிஜிபி சட்டப்படி பரிசீலித்து உரிய உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதே விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மாளவியா சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

டிஎஸ்பி மகேஸ்வரியிடம் விசாரணை

‘உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரண மாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். கோகுல் ராஜ் கொலை வழக்கில் நியாயமான விசாரணைக்கு அதிகாரிகள் இடை யூறாக இருந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையில் பெண் அதிகாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக’ கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, மகேஸ்வரியிடம் பேசியுள்ளார். இதையடுத்து டிஎஸ்பி மகேஸ்வரியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து அவர் நேற்று காலை சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT