ஊராட்சி நிர்வாகத்தில் தனக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை எனக் கூறி துணைத் தலைவர், உறுப்பினரை கண்டித்து பெண் ஊராட்சித் தலைவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் பெருகமணி ஊராட்சித் தலைவராக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரின் மனைவி கிருத்திகா(32) உள்ளார்.
இதே ஊராட்சியிலுள்ள 8-வது வார்டு உறுப்பினரான செந்தில்குமார், திருப்பராய்த்துறை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜன் ஆகியோர் கடந்த 19-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் அளித்தனர். அதில் பெருகமணி ஊராட்சி 8-வது வார்டில் நிதி முறைகேடு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஊராட்சி தலைவர் மீதும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும், முறைகேடுக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி செயலாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீது உரிய விசாரணை நடத்துமாறு ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை மிரட்டுவதாகவும், ஊராட்சி நிர்வாகத்தில் தனக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை எனவும் துணைத் தலைவர் மணிமேகலை, 8-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள்ஊராட்சிச் செயலாளர் செந்தில்குமார், திருப்பராய்த்துறையைச் சேர்ந்த முத்துராஜன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊராட்சித் தலைவர் கிருத்திகா, பெருகமணி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகேயுள்ள காந்தி சிலை முன் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து அங்குவந்த அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, பேட்டைவாய்த்தலை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் உள்ளிட்டோர் கிருத்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருத்திகா, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியபோது, “நான் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், என் மீது ஆட்சியரிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். நான் குற்றம் செய்யவில்லை என உறுதியானால் துணைத் தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த முத்துராஜனிடம் கேட்டபோது, “ஊராட்சி நிதியில் முறைகேடு செய்திருப்பது தகவல் அறியும்உரிமைச் சட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் என்பதால் அவர் மீது அவதூறு பரப்புவதாக கூறுவது தவறு” என்றார்.
இதுகுறித்து காவல் அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த ஊராட்சியின் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் வெவ்வேறுசமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆட்சியரிடம் ஊழல் புகார், உண்ணாவிரதம் போன்ற இந்த நிகழ்வுகள் குறித்து டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்படுகிறது” என்றனர்.