மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் குழுவினர் நாடகம் மூலம் கரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கரோனா குறைந்த பிறகு படிப்படியாக பயணிகளின் வசதிக்காக முக்கிய ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.
ரயில் பயணிகளின்பாதுகாப்பிற்கென பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்படி, ரயில் பெட்டிகள், கழிவறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன.
குளிர்சாதன பெட்டியிலுள்ள திரைகள் அகற்றப்பட்டுள்ளன. தலையணை,படுக்கை விரிப்புகள் போன்றவை வழங்கப்படுவதில்லை. பயணிகள் தங்கள் சொந்த படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குளிர்சாதனப் பெட்டிகளில் வெளிக்காற்று சுழற்சி மேம்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் நிலையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வருகை புரிந்து உரிய உடல் வெப்ப சோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சோப்புபோட்டு கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்ற வலியுறுத்தி ரயில் நிலையங்களில் சுவரொட்டி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை பயணிகளிடம் கொண்டு சேர்க்க, ரயில் நிலையங்களிலுள்ள தொலைக்காட்சி பெட்டிகள், பொது அறிவிப்பு கருவிகள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
மேலும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் குழு மதுரை, நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமேசுவரம், திண்டுக்கல் ரயில் நிலையங்களில் தெரு நாடகங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் உத்தரவின் பேரில் மதுரை முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா ரயில்வே பாதுகாப்புபடை ஆணையர் அன்பரசு ஆகியோர் இந்த கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.