செய்தியாளர்களிடம் பேசும் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன். 
தமிழகம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 31-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்களில் மனு அனுப்பும் போராட்டம்; தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு

க.ரமேஷ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அனுப்பும் போராட்டத்தை தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் நடத்துகிறது என்று அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக். 21) சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சி ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். இதற்காக ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஊதிய மாற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் கூட்டுறவுத் துறை மற்றும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கைகளை முறையாகப் பெற்று வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அறிவிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் ஓய்வூதியம் இருக்க வேண்டும்.

கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் கால தாமதத்தைத் தவிர்க்க வேண்டும். பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டுள்ளதால் அதற்குப் பதிலாக விழித்திரையைப் பயன்படுத்தித் தகவல்களை வழங்குவதற்காக அரசு பரிசோதனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏடிஎம் மூலமாகவே ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். தீபாவளி போனஸ் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான முறையில் வழங்கப்பட வேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலமாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம். தமிழக அரசு உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT