தெற்காசியாவில் மிகப்பெரிய அளவில் சேலத்தில் அமைக்கப்பட்டு வரும் கால்நடைப் பூங்காவை டிசம்பர் மாதம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஜீயர் மணவாள மாமுனிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
அதைத்தொடர்ந்து, ஆண்டாள் கோயிலில் அமைச்சர்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், "தமிழக அரசு அனைத்துத்துறைகளிலும் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.
கால்நடைத்துறையில் 3 மருத்துவ கல்லூரி, ஒரு ஆராய்ச்சி நிலையம், தெற்காசியாவில் மிக பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் தொடங்குவதற்கு கட்டிட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் மாதத்தில் இதைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கால்நடை பராமரிப்புத் துறையில் 1,154 மருத்துவர்களுக்கான பணியிடம் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் அறிவிக்கபட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. 2021 தேர்தலை பொருத்தவரை அதிமுக அரசு 5 ஆண்டுகளில் செய்த பணிகள், சாதனனைகளை மக்களிடம் சொல்லி வாக்களியுங்கள் எனக் கேட்போம்" என்றார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் மற்றும் கலைத்துறையினருக்கு தொடர்ந்து மிரட்டல் வருவது குறித்து கேட்டபோது, "கலைத்துறையினருக்கு மட்டுமல்ல, விஜய்சேதுபதி மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கு பாதிப்பு என்றாலும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.