அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம் 
தமிழகம்

அதிமுக மக்களுடன் மக்களாக இருக்கிறது; திமுக கூட்டணி பலவீனமாக இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

செய்திப்பிரிவு

திமுக கூட்டணி பலவீனமாக இருக்கிறது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (அக். 21) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணி தொடர் ஆலோசனைகளை நடத்துகிறதே?

அதிமுக மக்களுடன் மக்களாக இருக்கிறது. அதனால், நாங்கள் தேர்தல் நேரத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து வெற்றி பெறுவோம். மீண்டும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். இதனை நாங்கள் 100 சதவீதம் நம்புகிறோம். ஆனால், திமுக மனதில் அந்த நம்பிக்கை இல்லை. பலவீனமாக இருப்பவர்கள்தான் தேர்தலை எப்படி அணுகுவது எனச் சந்திப்புகள், ஆலோசனைகள் நடத்துவர். இது அவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுகின்றது, பலத்தைக் காட்டவில்லை. பலமாக இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் பலமாக இருக்கிறோம், எங்கள் கூட்டணியும் பலமாக இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்தான். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமைதான் அறிவிக்க வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளாரே?

அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்தான் எடப்பாடி பழனிசாமி. அதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம், மாறுபட்ட கருத்து கிடையாது. அது அவருக்கும் தெரியும். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே கொள்கைகள், லட்சியங்கள் இருக்கும். அதனால், அவர்கள் தனியாகப் போட்டியிடுகிறார்கள் எனச் சொல்ல முடியுமா?

மகாபாரதம் முப்பாட்டன்களின் சரித்திரம் என, கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

அவர் திடீரென நாத்திகவாதி என்பார், திடீரென ஆத்திகவாதி என்பார். அவர் சொல்வது யாருக்கும் புரியாது. 'பிக் பாஸ்' போனதால் என்ன வேண்டுமானாலும் சொல்வார். தேர்தல் காலம் என்பதால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகக் கூட சொல்லலாம். அதுதான் அவருடைய நிலை.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT