கோப்புப்படம் 
தமிழகம்

மழையில் நெல்மணிகள் சேதமடைவதை தடுக்க மேலும் 25 இடங்களில் கொள்முதல் நிலையங்கள்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையில் நெல் மணிகள் சேதமடைவதை தடுத்து, விரைந்து கொள்முதல் செய்ய ஏதுவாக மேலும் 25 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள் ளதாக மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 58,948 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

தற்போது அறுவடை முடிந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 288 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

குறுவையில் 3 லட்சத்து 65 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தினமும் சராசரியாக 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை 10 ஆயிரம் டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் மீதமுள்ள குறுவை நெல் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும். கொள்முதலுக்கு தேவையான சாக்கு, சணல் போதியளவு உள்ளது. விவசாயிகளுக்கு 24 மணி நேரத்தில் வங்கி மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், நெல் அதிகம் அறுவடை செய்யப்படும் வண்ணாரப்பேட்டை, மருங்குளம், தென்னமநாடு உள்பட மேலும் 25 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. கொள்முதல் தொடர்பாக தினமும் வருவாய்த்துறையினரிடமும் அறிக்கை பெறப்படுகிறது.

குறுவையில் அறுவடையும், விற்பனையும் இதுவரை 76 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 24 சதவீதம் விரைவில் நிறைவு பெறும்.

சம்பா சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 77 ஆயிரம் ஹெக்டேரில் நடவு முடிந்துள்ளது.

சம்பாவுக்கு தேவையான விதைகள், உரம் ஆகியவை தேவையான அளவு இருப்பு உள்ளது. பயிர்க் கடன் ரூ.340 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.165 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) சிற்றரசு, வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT