கே.பெத்தானேந்தல்-லாடனேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுவதற்காக நடந்த மண் பரிசோதனை. 
தமிழகம்

திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் பாலம் கட்ட மண் பரிசோதனை: 10 கிராமங்களை சேர்ந்த மக்களின் கனவு நனவாகிறது

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கே.பெத்தானேந்தல்-லாடனேந்தல் இடையே வைகை ஆற்றில் உயர்மட்டப் பாலம் கட்ட மண் பரிசோதனை நடந்தது.

வைகை ஆற்றின் தென்பகுதியில் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலை செல்கிறது. ஆற்றின் வடபகுதியில் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த கே.பெத்தானேந்தல், மணல்மேடு, கணக்கன்குடி, கருங்குளம், வெங்கட்டி, சடங்கி, பாப்பாகுடி உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மருத்துவம், தொழில், வியாபாரம், விளை பொருட்களைக் கொண்டு செல்லுதல் போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலை வழியாக திருப்புவனம், மதுரை செல்கின்றனர்.

இந்தச் சாலைக்குச் செல்ல ஆற்றுக்குள் தற்காலிகப் பாதை அமைத்துள்ளனர். வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில் மடப்புரம் வழியாக 10 கி.மீ. சுற்றி திருப்புவனம் செல்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் பேருந்து வசதியும் இல்லை. இதனால் கே.பெத்தானேந்தல், லாடனேந்தல் இடையே ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டுமென 30 ஆண்டுகளாகக் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை மனுக்கள் குழு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜா மனு கொடுத்திருந்தார். இதையடுத்து 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் கே.பெத்தானேந்தல், லாடனேந்தல் இடையே ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள் ளது.

இதையடுத்து பாலம் கட்டுவதற்கான இடத்தில் தலா 30 மீட்டர் ஆழத்தில் 21 குழிகள் போடப்பட்டு அதிகாரிகள் மண் பரிசோதனை செய்தனர். பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கனவு நிறைவேறும்.

SCROLL FOR NEXT