வெங்காயத்தைப் பதுக்குபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமைக் கடையில், ரூ.45-க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (அக். 21) தொடங்கி வைத்தார்.
அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"பண்ணை பசுமைக் கடைகளிலும், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை மேலும் அதிகரித்தால், அதனை நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் தேவைப்படுகிறது. இதில் 4 லட்சம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம். இந்த வெங்காயம் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய 85 நாட்கள் ஆகும். பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய 120-130 நாட்களாகும். தமிழக விவசாயிகள் பொதுவாக சின்ன வெங்காயத்தைத்தான் பயிரிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து பயிரிடலாம். திண்டுக்கல் உள்ளிட்ட 4-5 மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் 42% பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
வெங்காய விலை உயராதபடி கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2012-ல் விலை நிலைப்படுத்தல் நிதியத்தை ஏற்படுத்தினார். அதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியை மாநில கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ளோம். அதைப் பயன்படுத்தி, கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு பதுக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. தேவையான அளவு கொள்முதல் செய்துள்ளோம். 150 டன்னுக்கு மேல் வெங்காயம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம்".
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.