விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்வதுடன் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று (அக். 21) வெளியிட்ட அறிக்கை:
"டெல்டா மாவட்ட விவசாயிகள் அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைத்து முளைத்த நிலையில் உள்ளது. ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது போல், ரத்தத்தை வியர்வையாக சிந்தி மிகவும் கஷ்டப்பட்டு சாகுபடி செய்த விளைபொருட்களுக்கு உரிய மரியாதையோ, உரிய இழப்பீடு தொகையும் கிடைக்காமல் விவசாயிகள் வறுமையில் வாடுவது நிச்சயம் கண்டிக்கத்தக்க ஒன்று.
ஆகவே, விவசாயிகளின் விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வதுடன், நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போதுள்ள சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதேபோல், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு கிடைக்க வேண்டிய நிலையில், நாட்டில் ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் இருக்கும் மக்கள் ஒருபுறம், மறுபுறம் விளைவித்த பொருட்கள் வீணாகும் அவலமும் நீட்டிக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.
பயிர் செய்து அதனை விளைவிக்க விவசாயிகள் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அந்த விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமலும், அதனை உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க முடியாலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். உரலுக்கு ஒருபுறம் இடி மத்தளத்துக்கு இரண்டு புறமும் இடி என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகளின் நிலையுள்ளது. இந்த நிலை மாறவேண்டும்..
தற்போது தமிழக அரசு வெங்காயத்தின் விலையை 45 ரூபாய்க்கு குறைத்து விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.