ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு; ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதிக்கக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தமிழக ஆளுநர் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு தாமதம் இல்லாம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (அக். 21) வெளியிட்ட அறிக்கை:

"நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் வருங்காலக் கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன் கல்லூரியில் சேரக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். தமிழக அரசு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு தான் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆகவே, ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மாணவர்களின் நலன் கருதி, தமிழக முதல்வரின் சார்பில் மூத்த அமைச்சர்கள் தமிழக ஆளுநரைச் சந்தித்து இதனுடைய முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அரசு சார்பில் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக ஆளுநர் மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், சாதாரண அடித்தட்டு மக்களின் கனவுகள் நனவாகும் விதமாக இந்த சட்ட மசோதாவுக்கு இந்தக் கல்வி ஆண்டிலேயே இந்தச் சலுகை கிடைக்கும் வகையில், எந்தவிதமான காலதாமதமும் இல்லாமல் ஒப்புதல் அளிக்கும்படி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT