தமிழகம்

கர்நாடகாவில் மழையால் வரத்து குறைவு: ஈரோட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.125-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் இருந்து ஈரோடு காய்கறிச்சந்தைக்கு வரும் பெரியவெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், ஒரு கிலோ வெங்காயம் ரூ.125-க்கு விற்பனையானது.

ஈரோடு காய்கறிச் சந்தைக்கு கர்நாடக மாநிலம் மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சேலம், பவானி, திருச்செங்கோடு பகுதிகளில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சராசரியாக, நாளொன்றுக்கு 50 டன் வெங்காயம் வரத்து இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக வரத்து 20 டன்னாக குறைந்துள்ளது. இதனால், பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.125 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது: கர்நாடகமாநிலத்தில் தற்போது கனமழைபெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் இருந்து, தினமும் ஈரோடு பெரிய மார்க்கெட்டுக்கு 10 லாரிகளில் பெரிய வெங்காயம் வருவதுண்டு. ஆனால் தற்போது அங்கு பலத்த மழை பெய்து வருவதால் 2 லாரிகளில் மட்டுமே பெரிய வெங்காயம் வரத்து உள்ளது. இதேபோல் சின்ன வெங்காயத்தின் வரத்தும் குறைந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.105 முதல் ரூ.125 வரை விற்பனையானது. கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பினாலும், தீபாவளி வரை வெங்காயத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு வெங்காய வியாபாரிகள் கூறினர்.

கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பினாலும், தீபாவளி வரை வெங்காயத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT