சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசிவிட்டு, விரைவில் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆவன செய்யப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாக அவரை நேரில் சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறினர்.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதைப் பின்பற்றி புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக செய்தித்துறைஅமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் அவரை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். முதல்வரின் தாயார் சமீபத்தில் காலமானதால், முதல்வருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர். பின்னர், கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், ‘நாடு முழுவதும்திரையரங்குகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் திரையரங்குகளை திறந்துள்ள நிலையில், தமிழகத்திலும் திரையரங்குளை திறக்க அனுமதிக்க வேண்டும். பெரிய திரையரங்குகளை மல்டி பிளக்ஸ்திரையரங்குகளாக மாற்றம் செய்யவும், ஊரடங்கு காலத்தில் உரிமம் புதுப்பிக்க வேண்டிய திரையரங்குகளுக்கான உரிமங்களை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 8 மாதமாக திரையரங்குகள் பூட்டி இருப்பதோடு, ஊழியர் சம்பளம் மற்றும் இதர செலவுகளால் மிகவும் கஷ்டத்தில் இருப்பதை தெரிவித்து, கேளிக்கைவரியை நீக்கி திரையரங்குகளுக்கு புத்துணர்வு அளிக்க வேண்டும்என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு ஆவன செய்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துபேசிவிட்டு, விரைவில் திரையரங்குகளை திறப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்’’ என்றனர்.