சென்னை கோயம்பேட்டில் காய்கறி சந்தையை புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்து திறப்பதற்காக காத்திருக்கிறது. படம் : ம.பிரபு 
தமிழகம்

கோயம்பேடு சந்தையில் 2,500 கடைகள் திறக்கும் தேதியை 2 நாட்களில் அறிவிப்பதாக உறுதி: உண்ணாவிரதத்தை வியாபாரிகள் கைவிட்டனர்

செய்திப்பிரிவு

சென்னை கோயம்பேடு சந்தைதிறக்கப்பட்டாலும், அங்கு வியாபாரம் செய்ய காய்கறி மொத்த வியாபாரிகள் 200 பேருக்கு மட்டுமேஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், சிறு மொத்த விற்பனையில் ஈடுபடும் 1,700 காய்கறிவியாபாரிகள், 800 பழ வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘கோயம்பேடு சந்தையை முழுமையாக திறந்து, அனைத்து வியாபாரிகளும் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைவருக்கும் மாற்றுஇடம் வழங்க வேண்டும். அதுவும்முடியாவிட்டால் வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயம்பேடு சந்தை சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் தலைமையில் கோயம்பேடு பழச்சந்தை வளாகத்தில் வியாபாரிகள் நேற்றுமுன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் நேற்று அதிகாலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்தை வியாபாரிகள் கைவிட்டனர்.

இதுகுறித்து சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு சந்தை திறக்கும் தேதி 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று சந்தை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்புஅளிக்கும் வகையில் போராட்டத்தை கைவிட்டோம். 2 நாட்களில்தேதி அறிவிக்காவிட்டால், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT