சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. அடையாறு பகுதியில் நேற்று மழையில் நனைந்தவாறு சென்ற வாகனங்கள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

சென்னையில் மழையுடன் விடிந்த காலைப் பொழுது: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று மழையுடன் காலைப் பொழுது விடிந்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இம்மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

இந்தியாவுக்கு கிழக்கு மற்றும்மேற்கு பகுதிகளில் உள்ள கடல்பரப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாகப் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இது தமிழக மக்கள், குறிப்பாகசென்னை மாநகர மக்களுக்குபெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தென்மேற்கு பருவக் காற்றால் சென்னை மாநகருக்கு கடந்த ஒரு வாரமாக நல்ல மழை கிடைத்து வருகிறது.

சென்னையில் வழக்கமாக, மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று பொழுது விடியும் நேரத்தில் கருமேகம் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. பின்னர் மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதனால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல இடங்களில் தற்போது நிலத்தடி நீரின் அளவும் உயர்ந்து வருகிறது. மொத்தத்தில் நேற்றைய காலைப் பொழுது மழையுடன் விடிந்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT