தமிழகம்

தமிழகத்தில் கரோனா தொற்றைத் தொடர்ந்து டெங்குவால் 1,785 பேர் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால்1,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கஉள்ளதால் டெங்குவின் பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. கரோனா தொற்றுடன், டெங்குகாய்ச்சலும் பரவி வருவதால்மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பது, அதன் உற்பத்தியை தடுப்பது போன்ற பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடுமுழுவதும் 16,439 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கர்நாடகாவில் 2,968 பேரும் கேரளாவில் 2,461 பேரும் மகாராஷ்டிராவில் 2,026 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,785 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறையின் இணை, துணை இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயின்ட் டப்பாக்கள், தேவையற்றபிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகக் கூடும். அதனால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது.

தொற்று, நோய் வராமல் தடுக்கசோப்பு போட்டு அடிக்கடி கைகளை தண்ணீரில் கழுவ வேண்டும். ஆழ்துளை கிணறுகள், தரைமட்ட குடிநீர்தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றை சுத்தம் செய்த பின்னரே குடிநீரை சேகரிக்க பயன்படுத்த வேண்டும். சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT