சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்க 36 தனிப் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி வரும் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்க செயலாளர் எம்.ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தீபாவளியையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பட்டாசுகளை வாங்கிச் செல்ல வசதியாக தீவுத்திடலில் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு கடைகள் அமைப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தரமான சிவகாசி பட்டாசுகள் மட்டுமே விற்கப்பட்டன.
அடுத்த ஆண்டுகளில், வெளியாட்களுக்கு டெண்டர் விட்டதால் பட்டாசு விற்பனையில் அனுபவம் இல்லாதவர்களும் தீவுத் திடலில் பட்டாசுக் கடை அமைத்து மிகவும் ஆபத்தான சீனப் பட்டாசுகளை விற்றனர். இந்த ஆண்டும் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் நோக்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செயல்படுகிறது. மிகவும் ஆபத்தான சீனப் பட்டாசுகள் அங்கு விற்கும் அபாயம் இருப்பதை இந்த கழகம் உணரவில்லை. எனவே, எங்கள் சங்க உறுப்பினர்கள் சலுகை விலையில் தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் வைக்க அனுமதிக்கவும், அதன் மூலம் சிவகாசி பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கூடுதல் அரசு பிளீடர் ஆர்.பாலரமேஷ் ஆகியோர் வாதிட்டபோது கூறியதாவது:
இந்த நீதிமன்ற உத்தரவின்படி, சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்க வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை ஆகிய 4 துறைகள் கொண்ட 36 தனிப்படைகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் 4 தனிப்படைகளும், விருதுநகர் மாவட்டத்தில் 2 தனிப்படைகளும் அடங்கும். ஈரோடு உள்ளிட்ட சில இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சீனா மட்டுமல்லாமல் இதர நாடுகளில் இருந்தும் பட்டாசுகள் இறக்குமதி செய்வதைத் தடுப்பதில் உறுதியாக இருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்ககம் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிக் கடிதத்தை சமர்ப்பிக்கிறோம்.
இவ்வாறு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன் குறிப்பிடுகையில், “இந்தியாவில் நேபாளம் வழியாகவும், கடல் மற்றும் விமானம் மூலமும் சீனப் பட்டாசுகள் கொண்டுவரப்படுவதாகவும், இதனால் சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சீனப் பட்டாசு தயாரிப்பின்போது தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபடும் என்றும் கூறப்படுகிறது. எனவே சீனப் பட்டாசுகள் வருவதையும், விற்பதையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, தனிப்படைகள் அமைக்கப்பட்ட பிறகு சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.