மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், தற்போதைய ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களை கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை காவல்துறையினர் திருச்சியில் கைது செய்துள்ளனர்.
அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜனநாயகத்தின் குரல்வளை இந்த ஆட்சியில் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. கோவன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.