தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

விளாத்திகுளம் வட்டார திட்ட அலுவலரைக் கண்டித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார திட்ட அலுவலரைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட விளாத்திகுளம் வட்டார அலுவலர் அங்கன்வாடி ஊழியர்களை அவதூறாக பேசி வருகிறார். ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் மாதம் ரூ.250 கட்டாய வசூல் செய்து வருகிறார்.

ஊழியர்களிடையே மோதல் போக்கை தூண்டி வருகிறார். அங்கன்வாடி ஊழியர்களை அலுவலகத்திலும், வீட்டிலும் சொந்த வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறார்.

அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மாரியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.சந்திரா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

மாநில பொதுச்செயலாளர் டி.டெய்சி, மாநில செயலாளர் டி.சரஸ்வதி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.பேச்சிமுத்து, மாவட்ட துணைத் தலைவர் இல.ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT