கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவை தகர்க்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதாக கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும், சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவைப் பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், அஐய்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாகக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அண்ணா பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் தனி முத்திரை பதித்துள்ளது. இப்பல்கலைக்கழகம் தமிழகத்தின் சொத்து. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மத்திய அரசு தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசின் ஆலோசனைக் குழுவிடம் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கலாம் என மாநில அரசு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்தது முதல் தவறு. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மாநில அரசின் உதவி இல்லாமல் நாங்களே நிதியைத் திரட்டிக்கொள்வோம் என மாநில அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக மத்திய அரசிற்குக் கடிதம் எழுதும் செயல் கண்டிக்கத்தக்கது.
நியாயமாக மாநிலத்தின் சட்ட அமைச்சரும், கல்வி அமைச்சரும் துணைவேந்தர் சூரப்பாவைப் பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையைச் செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இவ்விவகாரத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக ஆளுநர் டிஸ்மிஸ் செய்திட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்.
இதேபோல தமிழக சட்டப்பேரவையின் அனைத்து அரசியல் கட்சிகளும் 1 கோடி கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட முன்வடிவைக் கொண்டு வந்தனர். அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஆளுநர் தற்போது வரை எந்தவித அனுமதியும் கொடுக்கவில்லை. கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவைத் தகர்க்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
பாஜக நியமனம் செய்த ஆளுநர்கள் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளைக் கவிழ்க்கவும், பாஜக ஆட்சியில் அமர்வதற்கும் நள்ளிரவிலும், அதிகாலையிலும் கையெழுத்து இடுகிற காட்சியைப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற செயலுக்குத்தான் ஆளுநர்கள் ஒப்புதல் கொடுப்பார்களா என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேள்வி எழுப்புகிறோம். மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவரே தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவுக்கான சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே எனக் கண்ணீர் விட்டு அழுத காட்சியைத் தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிறைவேற்றிய இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இதேபோல தன்னிச்சையாக விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்'' எனத் தெரிவித்தார்.